அட்சய திருதியை என்றால் என்ன? - aanmeegam tamil 5


சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து அதன் பிறகு வரும் மூன்றாம் நாள் தான் அட்சய திருதியை எனப்படுகிறது. இது சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

அட்சயம் என்றால் “வளர்வது” என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை அன்று நாம் புண்ணிய காரியம் செய்தால் அதன் பலன் பல மடங்காக நமக்கு திருப்பி கிடைக்கும் என்கிறார்கள்.

அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அட்சய திருதியை நாளில் இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். அதனால் நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழலாம்!

“அட்சயம்” என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். இதற்கு “வளருதல்” என்று அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். இன்றைய தினத்தில் வீட்டில் கிருஷ்ணர் சிலையோ படமோ இருந்தால் அவல் படைத்து பூஜை செய்தால் அன்னை மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்.

ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான்!

கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம்.

செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி-பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை!

திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்!

வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான், அன்ன வளம் குன்றாத, பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். அதுவும் இப்படியொரு அட்சய திருதியை நாளில்தான்!

இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

சிவபெருமானுக்கு பிரம்மஹஸ்தி தோஷம் இருந்தது. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டது இந்த நாளில் தான். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம்.

அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்?
அட்சய திருதியை அன்று ஒரு குந்துமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம். புண்ணியம் நிறைந்த இந்த நன்னாளில் முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதனால் உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள். ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும்.

முக்கியமாக, உப்பு, சர்க்கரை போன்ற மங்கள பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதனால் அது தரித்திரங்களையெல்லாம் போக்கும். உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானமாகக் கொடுக்கலாம்.

வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது நல்லது. உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

அட்சய திருதியை நாளில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும். முக்கியமாக தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். ஏழைகளுக்கு தயிர்சாதம் தானம் தருவதால் 11 தலைமுறைக்கும் குறைவில்லா அன்பை கிடைக்கச் செய்யும் வளமான வாழ்வு அமையும்.

பசுவிற்கு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்தது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும். இவ்வாறு பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழ அட்சய திருதியை நாளில் இறைவனை வேண்டுவோம்.

அட்சய திருதியை நாளில் தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அன்று தானம் கொடுத்து பல தலைமுறைக்கும் அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை சேர்த்து வைக்கலாம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.