நமது வீட்டில் அல்லது கோவிலில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். தினந்தோறும் தீபம் ஏற்றப்படும் வீட்டில், தெய்வபலம் பெருகுவதால் கெட்ட சக்திகள், செய்வினைகள் அணுகாது.
காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால், நமது அன்றைய அனைத்துச் செயல்களும் வெற்றியைத் தரும். மேலும், நமக்கு பெரும் புண்ணியம் உண்டாகும். நமது முன்வினைப் பாவம் விலகும். மாலையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும். மேலும், நமது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
திருவிளக்கில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி ஆகிய சக்திகள் உள்ளனர். தீபத்தின் ஒளியில் சரஸ்வதியும், தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். தீப ஒளி நம் மனதில் தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, விளக்கின் தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, விளக்கில் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
நமது வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது, விளக்கில் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது நம் வீட்டிற்கு கெடுதலைக் கொடுக்கும். விளக்கை குளிர்விக்கும் (அணைக்கும்) போது, கைகளால் தீபத்தை வீசி அணைக்கக்கூடாது. தீபத்தை வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். அல்லது, தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) "ஓம் சாந்த சொரூபிணே நமஹ" என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
வீட்டில் அல்லது கோவிலில் தீபம் ஏற்றி, ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி தீபத்தை வைக்கவேண்டும். கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபத்தை வைக்கலாம். தெற்கு திசை பார்த்து கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது. இதற்கான பலன்கள்...
கிழக்கு - துன்பங்கள் நீங்கும். குடும்பம் விருத்தி பெறும்.
மேற்கு - கடன் நீங்கும். சனிபீடை நீங்கும்.
வடக்கு - கல்வித்தடை, திருமணத்தடை அகலும். செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு - பெரும் பாவம் ஏற்படும். அபசகுணம் ஏற்படும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
தீபம் ஏற்ற பசுநெய், நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணை, தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. இந்த எண்ணையின் தீபங்கள் மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் ஏற்படுத்தும்.
தீபத்தின் ஒளி சுற்றுப்புற இருளைப் போக்குவது மட்டும் இல்லாமல், யார் அந்த தீபத்தை ஏற்றி வைக்கிறாரோ அவரது வாழ்க்கையில் உள்ள இருளையும் போக்குகிறது. ஆகவே, தீபம் ஏற்றி வாழ்வில் ஒளி பெறுவோம்.