பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து 1000 சிங்க முகங்கள், 2000 கைகளுடன் தோன்றியவள்.
கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது. அடியவருக்கு வாரி வழங்கும் 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன.
"என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரி எச்சரிக்கும் விதமாக டமருகம்.
இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்.
இவள் அபராஜிதா என்ற பெயர் பெற்றவள். அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி, நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.
இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.
ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றன.
தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும் காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை. எவருடைய கண்களுக்கும் எரிச்சல் ஏற்படாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. கைமேல் பலன் தருவாள்.
மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா என்று புராணங்கள் கூறுகின்றது.
மானாமதுரையில் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது. இக்கோவில் அம்பாளைத் தவிர தனி மனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படுவது இல்லை.
கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரர், பிரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பாக அமைத்துள்ளது. மிகவும் உக்கிரகமான முகத்துடன் காட்சி தரும் இவள் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், கருணை உள்ளம் கொண்டவள்.
“ஜெய் பிரத்தியங்கிரே, ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே” இந்த மந்திரம் அனைவரும் எளிதாக சொல்லக்கூடியது.
காயத்ரீ மந்திரம்
ஓம் அபரஜீதாய வித்மஹே
பிரத்யங்கிராய தீமஹி
தந்நோ உக்ர ப்ரசோதயாத்
இம் மகாசக்தியை வணங்கினால் சத்ருபயம், வியாதி, தடைகள் விலகும். சுபிட்சமான வாழ்வு கிடைக்கும்.