கலசம் வைத்து பூஜிப்பது ஏன்? - aanmeegam tamil 11

நாம்  செய்யும் அனைத்து நல்ல காரியங்கள்,விசேஷங்கள் சிறப்புற நடைபெற கலசம் வைத்து அதில் நாம் வணங்கும் தெய்வத்தை ஆவாகரணம் செய்து வழிபடுவது இந்துக்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.

மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம்-செம்பு-சிறு பானைதான் கலசம் எனப்படுகிறது.

இந்த கலசத்தில்  மாவிலைகள் செருகப்பட்டு நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான லக்ஷ்மி தேவியின் உருவத்தை வரைவது உண்டு. இந்த பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.

பூரண கும்பம் 
கலத்தில் நீரோ அல்லது அரிசியோ நிரப்பப்படும். இதற்கு பூரண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

கிரக பிரவேசம், திருமணம், விரத நாட்களில் கலசம் வைத்து வழிபடுவார்கள். மேலும் விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்க்கும் வகையில் இக்கலசம்  வைக்கப்படுகிறது.

பெரியோர்களை முக்கிய பிரமுகர்களை பூரண கும்பம் கொடுத்து வரவேற்பர்.

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?
உலகை படைக்கும் முன் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைக்கும் கடவுளான பிரம்மதேவன் தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கும். அந்த புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவில், வடிவில், உயிர்த்துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும் உலகிலுள்ள மங்களமான அனைத்தையும் படைக்கும் சக்தி பெற்றது. கலசத்தில் வைக்கப்படும் மாவிலைகளும், தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கும். கலசத்தில் சுற்றிய நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாக கருதி பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர் அனைத்தும் வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும். பின்னர் பூஜைகள் முடிந்தவுடன், நம் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் புனித நீராக தெளிக்கப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை ஆலய கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.