கல்விச் செல்வத்தை வழங்கும் ஸ்ரீஹயக்ரீவர் - aanmeegam tamil 14


சொத்து, பணம், நகை, ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான் இவற்றை "செல்வம்" என்று அழைக்கிறோம். ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது. கல்வி கொடுக்கக் கொடுக்க குறையாதது.

நாம் ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, நமக்கு ஞானமும் கல்வியும் அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி. 

கையில் புஸ்தகத்தோடு காட்சி தரும் ஹயக்ரீவர் மனித உடலும், குதிரை முகமும் கொண்டவர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். இந்த ஹயக்ரீவர் அவதாரம் தசாவதாரத்திற்குள் ஒரு அவதாரம் அல்ல. மேலும், தச அவதாரங்களுக்கு முந்தையது. கல்விச் செல்வத்தோடு சேர்த்து, பொருள் செல்வத்தை தரும் விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இவர் "லட்சுமி ஹயக்ரீவர்" எனப்படுகிறார். 

ஹயக்ரீவர் எப்படித் தோன்றினார்?
பகவான் மஹாவிஷ்ணு உலகைப் படைப்பதற்காக பிரம்மனை படைத்தார். பிரம்மனுக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார். 

அதன் பிறகு... ஒருமுறை மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து மது, கைடபன் என்ற இரண்டு தோன்றினர். இவர்கள் மஹாவிஷ்ணுவிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.


வேதங்களை இழந்த பிரம்மன், அவற்றை மீட்டுத் தரும்படி மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தார். மஹாவிஷ்ணு வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே மஹாவிஷ்ணு தானும் குதிரை முகத்துடன் அவதாரம் எடுத்துக் கொண்டார். இவரே ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். இவர் அசுரர்களுடன் போரிட்டார். அசுரர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர். அதனால் போர் பல வருடங்கள் இடைவிடாது நடந்தது. ஹயக்ரீவர் மிகவும் உக்ரமாக சண்டையிட்டார். இறுதியில் இரண்டு அசுரர்களையும் போரில் கொன்றார். வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். 

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. அதனால் தங்களை புனிதமாக்கும்படி ஹயக்ரீவரிடம் வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த ஹயக்ரீவர் வேதங்களை உச்சிமுகர்ந்தார். அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. 

அசுரர்களுடன் போரிட்டதால் ஹயக்ரீவர் மிகவும் உக்ரமாக இருந்தார். அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் தேவர்கள் அமரச் சொன்னார்கள். மகாலட்சுமி அவரது இடது மடியில் அமர்ந்தார். இவரை "லட்சுமி ஹயக்ரீவர்" என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்விக்குத் தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், ஹயக்ரீவர் லட்சுமியை தனது இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார். 

கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்க வேண்டும். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் ஹயக்ரீவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும். 

கி.பி. 1480ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர். இவர் ஹயக்ரீவரை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே நேரில் வந்து உண்பாராம். 

அக்கால கட்டத்தில் சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டார். அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும், நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது. இது ஹயக்ரீவ விக்ரகம் ஆகும். அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயக்ருக்கு பதில் ஹயக்ரீவ விக்ரகம் தான் வந்தது. அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில், இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி அன்றிரவு சிற்பிக்கு கனவு வந்தது. 

ஸ்ரீவாதிராஜர் ஹயக்கீரவருக்கு ஹயக்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம் செய்வார். இது கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும்.

ஸ்ரீவாதிராஜர் தினமும் பூஜை செய்வார். பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார். ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உருவம் கொண்டு வந்து தனது முன்னங்கால்களை வாதிராஜர் தோளில் வைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விட்டுப் போய் விடுவார். இந்த அதிசயம் தினமும் நடந்தது. இப்படி எல்லாம் நடக்க சாத்தியமா என சந்தேகப்பட்டனர் சிலர். 

சந்தேகப்பட்டவர்கள் ஒரு நாள் பிரசாதத்தில் விஷம் கலந்து வைத்துவிட்டனர். அன்றைய தினம் குதிரை உருவில் வந்த ஹயக்ரீவர் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் பிரசாதம் முழுவதையும் தின்றுவிட்டார். அவரது உடல் முழுதும் பச்சை வண்ணமாயிற்று. அதன்பிறகு கத்திரிக்காயை ஒரு விதமாக சமைத்து படைக்க அதை உண்டதும் பச்சை வண்ணம் நீங்கியது. அந்த நிகழ்வுக்கு சான்றாக கழுத்தில் மட்டும் பச்சை வண்ணத்தை தாங்கி அருள் பாலிக்கிறார் ஹயக்ரீவர். 

புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவில்கள் உள்ள இடங்கள் ஆகும்.

புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும் அறிவும் மேம்படும். ஞாபக சக்தி கூடும். ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம். 

ஹயக்ரீவர் காயத்திரி மந்திரம்

ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்

இது ஞானத்தையும், ஒருமுகப்பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லது. இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்கத் தேர்ச்சி அடைவோம். 

கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும் உழைத்த உழைப்பு வீணாகாமல் இருக்கவும் ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செட்டிப்புண்ணியத்தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம். கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர் ஹயக்ரீவர். வைணவ தெய்வங்களில் ஹயக்ரீவர் முக்கியமானவர். எந்த ஒரு கலையையும் கற்கும் முன் ஹயக்ரீவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. 

ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப் புகழ் பெற்றது. சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணயத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சித்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக்கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். 

மேலும், அதிக மதிப்பெண்கள் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் செட்டிப் புண்ணியம் கோயிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜையின்போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பிறகு, பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 

இத்தலத்துக்கு வர இயலாதவர்கள் தங்கள் ஊரில் அருகில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வின்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இப்பிரார்த்தனை பெரிதும் உதவுவதாகப் பயன் பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

நல்ல கல்வி அறிவு இருந்தால் இழந்த செல்வத்தைக்கூட திரும்ப பெறலாம் என்பார்கள். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான். சிறந்த கல்வியை குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் முதல் கனவாக இருக்கும். 

ஹயக்ரீவ ஜெயந்தி (பிறந்த நாள்) ஆவணி மாதம் திருவோணம் நட்சத்தித்தன்று கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் மஹாநவமி அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரத்தன்று ஸ்ரீஹயக்கீரவருக்கு பூஜை செய்யலாம். மஞ்சள் நிறம்தான் இவருக்கு உகந்தது. திருவோணம் நட்சத்திரத்தன்று ஹயக்ரீவ ப்ரசாதம் செய்து, மஞ்சள் நிற பூக்களால் இவரை அர்ச்சித்து, பூஜை செய்யலாம். 

ஹயக்ரீவ பிரசாதம் தயாரிப்பது எப்படி?
கடலைப்பருப்பு பூரணம் செய்வோமே அது போல் தான். கடலைப்பருப்பை குக்கரில் அதிகம் குழையாமல் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும். 1 கப் பருப்பிற்கு 1 கப் வெல்லத்தூள் சேர்த்து வாணலியில் நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது நெய் சேர்த்து சுருளும் படி வதக்கவும். ஏலம், வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். இதுவே ஹயக்ரீவ பிரசாதம் தயார். 

ஹயக்ரீவரை வழிபட மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்லோகம் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் கூறி பூஜித்தால், கல்வியும், செல்வமும் பெறலாம். 

ஞானானந்த மயம் தேவம் 
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 
ஸர்வ வித்யானாம் 
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

இதன் பொருள்...
தூய மெய்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய்மையானவரும், 
அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன்.